விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார்.
மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.