முதலில் ஆடிய இலங்கை 196 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 196 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது.
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது நியூசிலாந்து.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. அசலங்கா 67 ரன்னில் அவுட்டானார். குசல் பெரேரா அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. மார்க் சாம்பன் 33 ரன்னும், டாம் லதாம் 27 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் அரை சதம் அடித்து அசத்து 66 ரன்கள் விளாசினார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 8 ரன் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 3 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி பெற்றது. அசலங்கா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.