இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இரத்து செய்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை ரக்பி மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் ஆகியோர் குறித்த வர்த்தமானி அறிவித்தலை சட்டவிரோதமானதாக அறிவித்து அதனை இரத்துச் செய்யுமாறு கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி ஜயவர்தன, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு தமது கட்சிக்காரரான விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டார்.
இந்த மனு இன்று (ஏப்ரல் 03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கு, மனு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக, மனுவை ஏப்ரல் 06ஆம் திகதி மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.