நடிகை சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய துறையில் பணியாற்றும் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறேன். எந்தவித பயமின்றி நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் சமுதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ? என்ற பயம்தான்.
தார்மீக போதனையாளர்கள் என்று கூறிக்கொண்டு வலம் வரும் ஒரு சிலர் பெண்கள் இவ்வாறுதான் உடை அணிய வேண்டும், இந்த இடங்களுக்கு மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கோட்பாடுகள் விதித்து அதன் அடிப்படையில்தான் பெண்களின் குணங்களை யூகிக்கின்றனர். தங்களுக்கு என்ன நடக்கிறது? என்பதை கூட தெரிந்து கொள்ள இயலாத பச்சிளம் குழந்தைகளிடம் இத்தகைய தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுபவர்களை, அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?
தாய் நாடு என்று பெண்மையை போற்றும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆண் தெய்வங்களுக்கு இணையாக பெண் தெய்வங்களை வணங்கும் நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது பெண்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் அழிந்து விட்டது. இது நம் நாட்டுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம்.
அந்த நிலைமையை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. பெண்களுக்கு தங்களின் மரியாதையை பெற்றுத்தர நாம் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு அம்மாவாக என் மகனுக்கு பெண்களை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் சொல்லித்தருவேன் என உறுதி மொழி எடுக்கிறேன்.
இவ்வாறு சினேகா கூறியுள்ளார்.