கடந்த வருடம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் ஒப்புதலுடன், நாடாளுமன்ற பொதுச் செயலாளரால் வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 134 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்ற அதேவேளை அனுரகுமார திஸாநாயக்க 03 வாக்குகளை பெற்றார்.
மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 பேர் வாக்களித்தனர். அதில் 4 பேரின் வாக்குகள் செல்லுபடியற்றவை என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.