இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென 100 மெட்றிக் தொன் அரிசியும் 8 நீர் தாங்கிகளையும் வழங்குவதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பின்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்து கவனஞ்செலுத்தப்பட்டதோடு, இவ்விடயங்களில் இரு நாடுகளினதும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்தியாவின் அனுசரணையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.