திருகோணமலையில் தமிழ் – சிங்கள கடற்தொழிலாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருக்கடலூர் மற்றும் அதனை அண்டிய விஜிதபுர ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த தமிழ், சிங்கள கடற்தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 6 பேரும் திருகோணமலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுருக்குவலை பயன்பாடு
தமிழ் கடற்தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அயல் கிராமத்தைச் சேர்ந்த சிங்கள கடற்தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுருக்கு வலையைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கிடையிலும் வாய்த்தர்க்கம் முற்றி, கரையோரத்தில் மோதலாக மாறியது. இரண்டு தரப்பினரும் கற்கள், கொட்டான்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் தலா 3 பேர் வீதம் 6 பேர் காயமடைந்ததுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.