வீதி பராமரிப்பு நிதிக்காக அனைத்து வகையான டீசல் மற்றும் பெட்ரோலுக்கும் ஒரு லீட்டருக்கு பத்து ரூபாய் என எரிபொருள் வரியை விதிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளது.
இந்த வரியானது மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வருமான உரிமம் பெறும் போது அறவிட திட்டமிடப்பட்ட 100 ரூபாய்க்கு மேலதிகமாக இந்த வரி அறவிடப்படவுள்ளது.
இந்த வீதி பராமரிப்புக் கட்டணத்தின் மூலம் வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 80 கோடி ரூபா எனவும் வீதிப் பராமரிப்புக்கான வருடாந்த செலவு சுமார் 2200 கோடி ரூபாய் எனவும் அமைச்சினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து ரூபாய் எரிபொருள் வரி விதிப்பதன் மூலம் வருடாந்தம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெற முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டும் இதே போல் எரிபொருள் வரி விதிக்கப்பட்டது, ஆனால் சில காரணங்களால் அது இறுதிக்கட்டத்தில் கைவிடப்பட்டது.
புதிய வரியை நிர்வகிக்க நிர்வாக குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதிகள் மற்றும் மாகாண, நிர்வாக மற்றும் கிராமிய வீதிகளின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.