கடந்த 2013 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8 – 4ன் படி, மக்கள் பிரதிநிதிகள் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 90 நாட்களில் மேல்முறையீடு செய்வதன் மூலம் பதவி இழப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இதனால், வழக்குகளில் தண்டனை பெற்ற பலரும் பதவிகளில் தொடர்ந்தனர். வழக்குகளை இழுத்தடித்தனர்.
இந்நிலையில், 2005 ஆம் ஆண்டு வழக்கறிஞர் லில்லி தாமஸ், சுக்லா ஆகியோர் இச்சட்டப் பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,’மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8- 4, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மானது என்ப தால், அது செல்லாது என தீர்ப்பு வழங்கியது.
இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர் கள் தண்டனை அனுபவித்த காலத்தில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதன்பின், 2014ல், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக, இந்தியாவிலேயே பதவி இழந்த முதல் முதல்வர் என்ற பெயரை, ஜெயலலிதா பெற்றார். தற்போது, சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு, கவர்னர் வித்யாசாகர் ராவின் தாமதம் போன்ற காரணங்களால், எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும், சசிகலா முதல்வராக பதவியேற்பது தள்ளிப் போனது.
ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால், குற்ற வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த இரண்டாவது முதல்வர் என்ற பெயர் கிடைத்திருக்கும்.
சசிகலா இன்னும் அனுபவிக்க வேண்டிய மூன்றரை ஆண்டுகள் தண்டனையை முடித்து விட்டு, நடப்பு, அதிமுக ஆட்சியிலேயே வெளியில் வந்து விடுவார். இருப்பினும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தண்டனை அனுபவித்த நாளில் இருந்து, மேலும், ஆறு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.