மிகக் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் (10.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “அரசமைப்பை மீறி சாதாரணமாக மக்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைக் கூட குறைக்கின்ற ஒரு சட்டமாகவே இது காணப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு எதிரான சட்டம்
கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரம் உள்ளிட்டவற்றைக் குறைக்கின்ற அதேநேரம் இன மற்றும் மத அமைதிக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
முழு நாட்டுக்குமே இது பாதிப்பாக இருந்தாலும் கூட தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அது மிக மிக மோசமான பாதிப்புக்களையே ஏற்படுத்தக் கூடிய பயங்கரமானது. குறிப்பாக இனவாத ரீதியாகத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தை முழுமையாகப் பாவிக்கலாம் என்ற அச்சம் இருக்கின்றது.
உண்மையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றே நாம் தொடர்ந்து கோரி வருகின்றோம். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட வெளிநாட்டு அமைப்புக்களும் வெளிநாடுகளும் மற்றும் உள்நாட்டில் உள்ள அமைப்புகளும் இதனையே கோரியிருந்தன. ஆனால், இப்போது அந்தச் சட்டத்துக்கு மாறாக அதுவும் அதனை விடவும் ஆபத்தானதும் அச்சுறுத்தலானதுமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக ஆட்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
மிக மோசமான சட்டம்
எங்களைப் பொறுத்தார் வரையில் இது சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற நடவடிக்கையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். குறிப்பாக ஜே.ஆர். ஜெயவர்த்தன எப்படி முன்னைய சட்டத்தைக் கொண்டு வந்து மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளைச் செய்தாரோ அதை விடவும் மிக மோசமானதொரு சட்டத்தை இப்போது கொண்டு வர முயல்கின்றனர்.
உண்மையிலா மாமானாரைப் போல் மருமகனாருக்கும் வழி வந்த எண்ணப்பாடாகத் தான் நான் இதனைப் பார்க்கின்றேன். இன்றைக்கு ஆட்சியிலுள்ளவர்கள் அந்தச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சி எடுத்தாலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றார்கள் அதனை நடைமுறைப்படுத்தத்தான் போகின்றனர்.
அதனால் எப்போதுமே தமிழ் மக்கள்தான் பல்வேறு பாதிப்புக்களைத் தொடர்ந்தும் எதிர்நோக்கப் போகின்றவர்களா இருப்பார்கள். ஆகையால் இதனை அனைவருமே எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.