இலங்கையில் நடைமுறையிலுள்ள பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் தற்போது போலியான தரமற்ற பூச்சிக்கொல்லிகளையும் களை நாசினிகளையும் விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்று வரும் நிலையில் அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தரமற்ற பூச்சிக்கொல்லிகளையும் களைநாசினிகளையும் விற்பனை செய்தல், மற்றும் அவற்றை சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்தல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதமும் சிறைத்தண்டனையும் போதாது. இவ்வாறான வர்த்தகர்களுக்கு குறைந்த பட்சமாக 15 லட்சம் ரூபா நட்டஈடும் மூன்று வருட சிறைத்தண்டனையும் கிடைக்கும் வகையில் புதிய சரத்துக்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பூச்சி மற்றும் களைநாசினிகளின் விலை அதிகரிப்பை விவசாயிகள் தாங்கிக் கொள்ள முடியாததால் 20 கிராம் பக்கட்டுக்களை சந்தைக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்யுமாறு பூச்சிக்கொல்லிப் பதிவாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சர் பூச்சிக்கொல்லி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தும் களைக்கொல்லிகள் பலவற்றின் விலைகளை குறைக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.