ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை வரவேற்றுள்ள ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வதாக அறிவித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டமூலமானது, அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றீடாக முன்வைக்கப்பட்டுள்ள சட்டம்
இந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலமானது 1994ம் ஆண்டின் 19 இலக்க கையூட்டல் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் சட்டம் மற்றும் 1975ம் ஆண்டின் 1ம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனச் சட்டம் என்பவற்றின் மாற்றீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பில், பல்வேறு தரப்புகளிடம் இருந்து கருத்துகள் கோரப்பட்டு அவதானம் செலுத்தப்பட்டது. அதனடிப்படையில், இலங்கையில் தற்பொழுது உள்ள ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த உதவும் வகையில் பல முன்னேற்றகரமான விடயங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முக்கிய மாற்றங்கள்
தனியார் துறை, பாலியல் இலஞ்சம், விளையாட்டு நிகழ்வுகளுடன் தொடர்புடைய ஊழல் குற்றங்கள் அதில் உள்வாங்கப்பட்;டுள்ளமை முக்கிய மாற்றங்களாக கருதமுடிகின்றது.
அத்துடன், குற்றங்களுக்காக விதிக்கப்படும் அபராத தொகையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள சொத்து அறிவிப்பு முறைமையில், ஒரு மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பாக கையூட்டல் அல்லது ஊழல் பற்றி புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவொன்று காணப்படும் அதில் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அனைத்து அறிவிப்புக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சில முக்கியமான தகவல்கள் திருத்தப்பட்டு இலத்திரனியல் முறைமையூடாக சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் பொதுவெளியில் கிடைக்கப்பெறும்.
இதன்மூலம் தனிநபர்களின் சட்டவிரோத செறிவூட்டல் தொடர்பான விடயங்களை இலத்திரனியல் முறைமையூடாக மக்களினால் அடையாளம் காண முடியும்.
ஜனாதிபதியின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்கள்
தற்போதைய சட்டத்தை போலின்றி, இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில், ஜனாதிபதியின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறும் கோருகிறது. எவ்வாறாயினும், ட்ரான்ஸ் பேரன்ஸி நிறுவனமானது இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்கிறது.
முக்கிய இரண்டு விடயங்கள்
இச்சட்டமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீற முற்படுகிறது. முன்மொழியப்பட்ட சட்டத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசிய பாதுகாப்பு பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டிய பிரிவுகள் காணப்படுகின்றன.
ஆகவே, புதிய சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தகவல்களை வெளியிடுவது ஆணைக்குழுவின் சிறப்பு அனுமதியுடன் மாத்திரமே சாத்தியமாகும்.
எனவே, அதிலிருந்து தகவல்களை அணுகுவதை மிகவும் கடினமாக்குவதன் மூலம் இரகசிய கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன், ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் எனும் நோக்கமும் மறுக்கப்படுகிறது.
இதேவேளை, தவறான குற்றச்சாட்டுகளை குறிக்கும் இந்த சட்டமூலத்தின் 119 வது பிரிவு, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் எதிர்மறையான சமிக்ஞையை தோற்றுவிக்க கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, முறைப்பாட்டினை மேற்கொள்ளும் நபர்கள் மத்தியில் அச்சுறுத்தல் மற்றும் அச்சுறுத்தும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது வினைத்திறனான சட்ட நடைமுறையாக்கம் மற்றும் ஜனநாயக சூழ்நிலை என்பன சட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானவையாகும் என ட்ரான்ஸ் பேரன்ஸி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.