கடந்த வார இறுதியில்,மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரகசிய ஆவணங்கள்
பெப்ரவரி 17 ஆம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து ரகசியமாக திட்டமிட்டு இருந்ததாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி(Abdel Fattah El-Sisi) இதற்காக ஆயுதங்களை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி செய்யவும் உத்தரவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி
அத்துடன் மேற்கத்திய நாடுகளுடன் மோதலை தவிர்க்க, ராக்கெட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த விபரங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அல்-சிசி ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான எகிப்து இத்தகைய இராணுவ ஏற்றுமதியை திட்டமிட்டு இருந்தது மேற்கத்திய நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபரங்களை தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், அமெரிக்கா ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மை என அமெரிக்க அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.