பண்டிகை நாட்களில் பிரதான வீதிகள் மற்றும் உட்புறங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செற்படுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தலைமை பயிற்சி தாதிய அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் விபத்துக்கள் தொடர்பில் ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு கவனம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அது குறித்த தகவல்களை 1969 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகளுக்கான அறிவுறுத்தல்
மேலும், புத்தாண்டு காலப்பகுதியில் போதையில் வாகனம் செலுத்துபவர்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கார் மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ – தொடந்துவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் காரில் பயணித்த பிக்கு ஒருவரும், சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் தற்போது காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் குருநாகல், மஹவ பிரதேசத்தில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.