- புரட்டாசி மாதம் சனிக்கிழமை மிகவும் விசேஷமாகும்.
- சனிக்கிழமைகளில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
சனிபகவானை ‘ஆயுள்காரகன்’ என்று அழைப்பார்கள். சனி பகவானுடைய ஆதிக்கத்தை பொருத்தே மனிதர்களின் ஆயுட்காலம் அமையும். அந்த சனிபகவானை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் பெருமாள். எனவே பெருமாளை ‘சனி அதிபதி’ என்றும் அழைப்பார்கள்.
பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆகையால், சனிக்கிழமை அன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டுமென்றால், சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். முக்கியமாக சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள, சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.
சனிக்கிழமை விரதம் எப்படி இருக்கவேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். பகல் முழுவதும் பழங்களையும் நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, நல்லெண்ணை தீபம் ஏற்றி, திருமாலை வழிபட்டு பின்பு இரவு உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம். சனிக்கிழமை விரதம் என்பது எல்லா மாதங்களிலும் கடைப்பிடிப்பது சிறப்பாகும். முக்கியமாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை மிகவும் விசேஷமாகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சனிக்கிழமை விரதம் எடுக்காத பக்தர்களும் கூட, சனிக்கிழமை தோறும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சனிக்கிழமைகளில் பக்தர்கள் இன்னும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவசர அவசிய காரணங்கள் இல்லாமல் மருத்துவமனைக்கு செல்வது. விதை விதைப்பது போன்ற விவசாயம் சம்பந்தமான காரியங்களை சனிக்கிழமை செய்வதை தவிர்க்கலாம். மங்களகரமான காரியங்களை சனிக்கிழமை செய்வதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
சனிக்கிழமைகளில் எந்த காரியங்களை செய்யலாம் என்று கேட்டால் வழக்கு சம்பந்தமான காரியங்கள், பிரச்சனைகளை பேசி முடிப்பதற்கான சந்தர்ப்பங்கள், சமாதானம் பேசுவதற்கான நாளாகவும் சனிக்கிழமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசியல் ரீதியாக வெற்றிகளை கொடுக்கக்கூடிய நாளாக சனிக்கிழமை இருக்கும். சனிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வணங்கினால் நன்மைகள் நம்மை நாடி வரும்.
ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !