சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய ஸ்மார்ட்போனுடன் சியோமி பேட் 6 சீரிஸ் டேப்லெட் மாடல்களும் அறிமுகமாகும் என அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிறுவனம் தற்போது சியோமி 13 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே சியோமி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தனது வெய்போ அக்கவுண்டில் புதிய கேமரா சாதனம் ஒன்றின் டீசரை வெளியிட்டு இருக்கிறார். இந்த சாதனம் ஸ்மார்ட்போனை வழக்கமான கேமரா போன்று பயன்படுத்தும் வசதியை வழங்கும் என அதன் தோற்றத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. புதிய சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சியோமி நிறுவனர் வெளியிட்டு இருக்கும் சாதனம் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும் முறையில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது. லெய் ஜூன் வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் உள்ள கேமரா க்ரிப் சாதனம் கொண்டு சியோமி 13 அல்ட்ரா மாடலை பயனர்கள் வழக்கமான கேமராவுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. ஸ்மார்ட்போன் கேமரா விஷயத்தில் சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அதன்படி புதிய சாதனம் நான்கு 50MP பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் 1 இன்ச் அளவில் சோனி IMX989 சென்சாருடன் வேரியபில் அப்ரெச்சர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டீசரில் இடம்பெற்று இருக்கும் கேமரா க்ரிப்-இல் பிரத்யேக ஷட்டர் பட்டன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.