நிபந்தனைகளின் கீழ் அரசியலில் பிரவேசிக்கத் தயார் என இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம், அரவணைப்பு, ஊக்கம் மற்றும் நம்பகத்தன்மை உள்ள ஒரு நல்ல திட்டத்தை முன்வைக்க தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், அதைச் செய்ய தாம் எப்போதும் தயாராக இருப்பதாக ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் விளையாட்டு
சில குடும்பங்கள் மற்றும் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் 75 ஆண்டுகளாக, நாட்டில் விளையாடி வருகின்றனர் என்று ரத்நாயக்க கூறியுள்ளார். இலங்கையில் ரூபாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், உள்நாட்டுக் கடனைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்த்ததற்காக ரத்நாயக்க அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் ரத்நாயகவை விமர்சித்து வருகிறார். சுயாதீன ஆணைக்குழுவில் இருந்து அவரை நீக்குமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சுயாதினமாக பணிகளை செய்வோம்
ஜனக்க ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நியமிக்கப்பட்டார். விஜேசேகரவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தரப்பிலிருந்து, நாடாளுமன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்நிலையில் தாம் ஒருபோதும் அமைச்சருடன் தனிப்பட்ட பிரச்சினைகளை கொண்டிருக்கவில்லை. எனினும் பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு, ஒரு சுயாதீன ஆணையம் என்ற அடிப்படையில் தாம், தமது பணிகளை செய்வதாக ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.