- கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
- வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.
கிர்ணி பழத்தின் (Rock Meelon) ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதி ஊட்டச்சத்து நிறைந்தது. கிர்ணி பழங்களில், உயிர்ச் சத்து ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
சாறு நிறைந்த கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதை உட்கொள்வதால் அழகான சருமம் கிடைப்பதுடன் பார்வைத்திறனும் மேம்படும். வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.
அமெரிக்காவின் கான்சஸ் மாநில பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை 2003-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, உயிர்ச்சத்து ‘ஏ’ மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக, கிர்ணி பழத்தின் மூலம் இத்தகைய பாதிப்புகள் கட்டுப் படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டன.
கிர்ணி பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித் திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.
மிக மிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்புடைய, நன்கு பலனளிக்கக்கூடிய பழமாக கிர்ணி பழம் விளங்குகிறது.
சாறு நிறைந்த இதன் சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்றுக் கோளாறுகளைக் குறைக்க முடியும்.
கவனம் தேவை
வெட்டிய உடனே கிர்ணி பழத்தைச் சாப்பிட்டுவிட வேண்டும். கிர்ணி பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால், பழம் சீக்கிரம் கெட்டுவிடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.
வெவ்வேறு பழங்கள்
கிர்ணி பழத்தில் பலவிதமான வகைகள் இருக்கின்றன. மஸ்க் மிலான் மற்றும் ராக் மிலான்… இவை இரண்டுமே கிர்ணி பழங் களாகவே அறியப்படுகின்றன. சுவையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் உருவமும், நிறமும் மட்டுமே இவை இரண்டுக்கும் இடையில் சில வேறுபாடுகளை உண்டாக்குகின்றன.
ராக் மிலான், அளவில் சிறியதாக இருக்கும். அதேபோல வெளிப்புற தோல் பகுதி பச்சை நிறம் கலந்திருக்கும். ஆனால் மஸ்க் மிலான், அளவில் பூசணி போல பெரியதாக இருக்கும். அதன் தோல் பகுதியானது, ஆரஞ்சு கலந்த பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும்.