இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
இப்படத்தின் ஆந்தம் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று வெளியிட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இன்று முதல் இந்தப் படத்தின் புரொமோஷன் பணி தொடங்கியுள்ளது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, இப்படத்தின் ஆந்தம் பாடலை நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது, “நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதேயில்லை. இப்போது கல்லூரிக்கு வந்திருக்கிறேன். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன்.
பொன்னியின் செல்வன் 2′ படத்தின் பிண்ணனி இசையை 3, 4 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். எனக்கு இசையில் கொஞ்சம் மாற்றம் தேவைப்படும். சிலது மணிரத்னத்திற்குப் பிடிக்காது. ஆகவே கலந்து பேசி பின்னணி இசையை உருவாக்கியிருக்கிறோம். பின்னணி இசைக்காக லண்டன், துபாய், பாம்பே, சென்னை என பல இடங்களில் வேலைபார்த்திருக்கிறோம். இந்த ஆந்தம் உருவாக்கியதற்கு எந்த காரணமும் இல்லை மணிரத்னம் இதை இயக்கும்படியாக கூறினார். அதனால் இந்த ஆந்தமை உருவாக்கினோம்” என்று கூறினார்.