தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு
அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்கள் போக சத்யராஜ், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.
கிராமத்து திருவிழாவில் இடம்பெறுவதுபோன்ற பாடல் ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டது. அதே திருவிழா செட்டில் ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. இவை அனைத்தும் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளாம். கதைப்படி இரண்டு விஜய்.
இதில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் 80-களில் வருமாம். அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த பிளாஷ்பேக் போர்ஷனில் சத்யராஜ், சத்யன் இடம்பெறுகிறார்கள்.
அப்பாவை கொன்றவரை போலீஸான மகன் விஜய் பழிவாங்கும் வழக்கமான கதையைக் கொண்டுதான் இந்த படமும் உருவாகிறது. ஆனால் ட்ரீட்மெண்ட்டில் அட்லி வழக்கம்போல் தனது முத்திரியை பதிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இதற்குமுன்பு அவர் இயக்கிய ராஜா ராணியும் தெறியும் புதுமையான கதை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு பேக்கேஜாக படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. அதுபோல்தான் இந்த படமும் இருக்குமாம்.