எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 அக்டோபரில் நடத்தப்பட வேண்டுமெனவும், உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்பாளர்களின் பெயர் பட்டியல்
தற்போதுள்ள அரசியலமைப்பு படி, ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று 4 வருடங்களின் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சமகி ஜனபலவேக தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கையை மதத் தலைவர்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.