கிளிநொச்சி மாவட்டத்தில் பிறப்பத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு பிறப்பத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் போது தவற விடப்பட்ட பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் சட்ட ஆவணங்களை பெற்றுக் கொடுக்கும்பொருட்டு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பல்வேறுபட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களுடன் இணைந்து பல்வேறு நடமாடும் சேவைகளை மேற்கொண்டு ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள்
ஆனாலும் தற்போது மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாமலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளனர்.
குறிப்பாக கோனாவில் பாடசாலையில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிறப்பத்தாட்சி பத்திரம் இன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுவர் இல்லங்களில் உள்ள குறிப்பிட்ட சில சிறுவர்களுக்கும் இவ்வாறு பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலை காணப்படுகின்றது.
நடவடிக்கை
குறிப்பாக கடந்த 2007ஆம் 2008ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டாலும் அதன் பிரதிகள் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் அவற்றின் பிரதிகள் பெற முடியாத சூழல் காணப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட அரச அதிபர் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது “இதுவரை பிறப்பத்தாட்சிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.
இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாதவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அந்த விபரங்களின் படி பிறப்பு சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.