இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இச்சம்பவம் பற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-
நடிகை பாவனா திருச்சூர் அருகே பட்டுரைக்கல் என்ற பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கிருந்து கொச்சி, பனம்பிள்ளி நகருக்கு காரில் புறப்பட்டார். காரை டிரைவர் மார்ட்டின் ஓட்டினார். இரவு 8.30 மணிக்கு நெடுபாச்சேரி விமான நிலையம் அருகே சென்றபோது, கேட்டரிங் வேன் ஒன்று பாவனா சென்ற கார் மீது மோதியது.
உடனே மார்ட்டின் காரை நிறுத்தினார். அப்போது 2-வது மற்றும் 3-வது குற்றவாளிகள் காருக்குள் ஏறினர். அவர்கள் பாவனாவின் வாயை கைகளால் மூடி, சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும் பாவனாவின் செல்போனையும் பறித்துக் கொண்டனர். களம்பச்சேரி அருகே சென்றபோது காரில் இருந்து 3-வது குற்றவாளி இறங்கிக் கொண்டார்.
அப்போது 4-வது குற்றவாளி காருக்குள் ஏறினார். அவர், கருப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தார். அவர்கள் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பாலாரிவட்டம் அருகே சென்றதும், கார் நிறுத்தப்பட்டது. அங்கு 5-வது மற்றும் 6-வது குற்றவாளிகள் காருக்குள் நுழைந்தனர்.
அவர்கள் காரை அருகில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்றனர். அந்த வீட்டிற்கு கிரில் கேட் போடப்பட்டிருந்தது. அங்கிருந்து முக்கிய குற்றவாளி சுனில்குமார் வந்தார். அவர், முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தார். டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டத் தொடங்கினார்.
அங்கிருந்து காக்கநாடு வரை சுனில்குமாரே காரை ஓட்டினார். அப்போதுதான் பாவனாவுக்கு பாலியல் தொல்லை நேர்ந்தது. அந்த நேரத்தில் சுனில்குமார், பாவனாவை பார்த்து அவர், நடிக்கும் சில படங்களுக்கு ஒழுங்காக ஒத்துழைக்க வேண்டுமென்று எச்சரித்தார். அப்போது சுனில்குமாரின் முகத்தை மூடியிருந்த கைக்குட்டை அவிழ்ந்தது. இதில்தான் அவர் சுனில்குமார் என்பது பாவனாவுக்கு தெரியவந்தது.
அதன் பிறகு அந்த கும்பல் கொச்சி அருகே பாவனாவை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். திருச்சூரில் இருந்து கொச்சி வரை சுமார் 2½ மணி நேரம் இந்த கொடுமைகள் பாவனாவுக்கு நேர்ந்துள்ளது. அதன் பிறகு அவர், டைரக்டர் லால் வீட்டிற்கு சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்தின்பேரில் சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.
இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாவனா, பெண் மாஜிஸ்திரேட்டிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
என்னுடைய காரில் அத்துமீறி நுழைந்தவர் என்னை மிரட்டினார். முக்கியமான நபர் ஒருவரின் உத்தரவின்பேரில் இங்கு வந்துள்ளதாக கூறினார். அவர் கூறுவதை கேட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கொச்சியில் உள்ள ஒரு பிளாட்டுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாவனா, கடத்தப்பட்ட காரை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டனர்.
காருக்குள் கிடந்த பொருட்கள் உள்பட பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகிறது.