குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி கிடைத்ததை அடுத்து, அதனை பிடிக்கும் நடவடிக்கையை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரங்குகளை பிடித்து விமான நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான செலவை செலுத்த சீன நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் குரங்குகளை பிடிப்பது கடினம் என்பதால் குறித்த நிறுவனத்தினரையே பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் வந்த ஆசை
இதேவேளை, இலங்கையின் இரண்டு குரங்குகளை இந்தியாவில் மிருகக்காட்சிசாலை ஒன்று கோரியுள்ளமை விசேட அம்சமாகும். இது தொடர்பில் தேசிய விலங்கியல் திணைக்களம் கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
இரண்டு குரங்குகளுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து வழங்கப்படவுள்ள விலங்குகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, விலங்கு பரிமாற்ற திட்டங்களின் கீழ், மிருகக்காட்சிசாலையில் பிறந்த ஒரு விலங்கை மட்டுமே உலகில் உள்ள மற்றுமொரு மிருகக்காட்சிசாலைக்கு வழங்க முடியும்.
தேசிய விலங்கியல் திணைக்களத்தினால் வனப்பகுதியில் உள்ள விலங்கை பிடித்து வேறு மிருகக்காட்சிசாலையில் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் இலங்கையிலுள்ள குரங்குகள் உலகின் வேறு எந்த மிருகக்காட்சிசாலைக்கும் அனுப்பப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.