பல்கலைக்கழகங்களில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள பகிடிவதை குறித்து பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மத்துகம, ஆனந்த தேசிய கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களில் முறையற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது.
ஒரு சில மாணவர்களின் அசாதாரணமான செயற்பாடுகள் காரணமாக ஏராளமான பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.
நேற்று முன்தினம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானபீட மாணவர்களினால் புதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பகிடிவதை, இலவச கல்வியின் ஒரு சாபக்கேடு என தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் 40 – 50 வருடகால பல்கலைக்கழக வரலாற்றில் பகிடிவதை தொடர்பாக கரும்புள்ளிகள் காணப்படுவதாகவும் அறவித்துள்ளார்.
இது தொடர்பாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் இது குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் நிம்மதியை இழக்கும் வகையில் மாணவர்கள் செயற்படக்கூடாது எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.