சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் நோ பால், வைடுகளை வீசுவதால் காலதாமதம் ஏற்படுவதோடு அணிக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.
ஐதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. சென்னை: 16-வது ஐ.பி.எல். கிரிக் கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் , ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் , நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
ஐ.பி.எல். கோப்பையை 4 முறை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. சேப்பாக்கத்தில் நடந்த 2-வது போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.
மும்பையில் நடந்த 3-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் 3 ரன்னில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது. பெங்களூரில் நடந்த 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 ரன்னில் வென்றது.
சி.எஸ்.கே. அணி தற்போது 3 வெற்றி , 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 6- வது ஆட்டத்தில் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் 226 ரன் குவித்தும் போராடியே வெற்றி பெற முடிந்தது. அந்த அளவுக்கு பந்து வீச்சும் பீல்டீங்கும் மிகவும் மோசமாக இருந்தது. நாளைய ஆட்டத்தில் இதை சரி செய்வது அவசியமாகும்.
3 போட்டியில் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2 ஆட்டத்தில் சோபிக்கவில்லை. இதனால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ருதுராஜ் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 200 ரன் எடுத்துள்ளார். கான்வே (181 ரன்), ஷிவம் துபே, கேப்டன் டோனி ஆகியோரும் சி.எஸ்.கே. அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்.
இதே போல ஆட்டத்தில் விளைவை ஏற்படுத்தக் கூடிய மாற்று வீரரான அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடுவது அவசியமாகும்.
மொய்ன் அலியின் ஆல் ரவுண்டு பங்களிப்பில் இன்னும் முன்னேற்றம் தேவை. பந்து வீச்சாளர்கள் கூடுதலான பந்துகளை வீசுவதை தவிர்க்க வேண்டும். நோ பால், வைடுகளை வீசுவதால் காலதாமதம் ஏற்படுவதோடு அணிக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. இதில் கூடுதல் கவனத்துடன் சி.எஸ்.கே. பவுலர்கள் செயல்பட வேண்டும்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 3-வது ஐ.பி.எல். ஆட்டமாகும். இதனால் இந்தப்போட்டியை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் கோலாகலத்துடன் உள்ளனர்.
2 ஆட்டத்திலும் ரசிகர்கள் திரண்டு வந்து சி.எஸ்.கே. வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். நாளைய போட்டியிலும் ரசிகர்களின் உற்சாகம் இருக்கும்.
சேப்பாக்கத்தில் ஒரு ஆட்டத்தில் வெற்றி கிடைத்தது. மற்றொன்றில் தோல்வி ஏற்பட்டது. ரசிகர்களின் ஆதரவுடன் சேப்பாக்கம் மைதானத்தை தனக்கு சாதகமாக சி.எஸ்.கே. வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி பஞ்சாப் (8 விக்கெட்), கொல்கத்தாவை (23 ரன்) வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் (72 ரன்), லக்ேனா (5 விக்கெட்), மும்பை (14 ரன்) அணிகளிடம் தோற்று இருந்தது. ஐதராபாத் அணி 2 வெற்றி 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் 18 முறை மோதி உள்ளன. இதில் சி.எஸ்.கே. 13-ல், ஐதராபாத் 5-ல் வெற்றி பெற்றுள்ளன.