ராஜபக்சக்களை புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த தீர்வுகளும் எந்த சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்காலிகமான வெற்றி
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ராஜபக்சக்களை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.
இலங்கை அரசியலில் ராஜபக்சக்கள் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கின்றனர். இதனால் இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது.
இதற்கு பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர். கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.
பாலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகள்
நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, இளம் வயதிலிருந்தே பாலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.
ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மகிந்த ராஜபக்சவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.