வைத்தியசாலை கழிவுகளை எரியூட்டுவதற்கான தளம், நாவற்குழி மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அங்கு அமைக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
வைத்தியசாலை கழிவுகைளை எரியூட்ட நாவற்குழி மேற்கு கிராம அலுவலர் பிரிவால் முன்மொழியப்பட்ட நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமொன்று இன்று(20.04.2023) யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது எரியூட்டி அமைக்கப்படவுள்ள காணி, குடியிருப்புக்களை அண்மித்த காணியாக இருப்பதுடன் காணியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வயல் நிலங்களாகவும், தெற்கு பகுதி கடற்தொழிலாளர்கள் பயன்படுத்தும் பரவைக்கடலாகவும் காணப்படுன்கிறது.
சூழலுக்கு பாதிப்பு
இந்த சூழலில் ஆலயங்கள்,குளங்கள் மற்றும் குடிநீர் கிணறுகள் காணப்படுகின்றமையால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் போதிய கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் வைத்தியசாலை கழிவுகள் குடியிருப்புக்களுக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
மேலும் கழிவுகளை குடியிருப்புக்கள் மற்றும் ஆலயங்கள் ஊடாக கடந்து எடுத்து செல்ல நேரிடுவதால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகக்கூடும்.
அத்துடன் காற்று வீசும் போது எரிகூடத்தில் இருந்து வெளிவரும் மாசுக்காற்று காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன் நோய் நொடிகள் ஏற்படக்கூடும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் அனுமதி முக்கியம்
இந்நிலையில் எரியூட்டி அமைப்பதற்குரிய பங்குதாரர்களுடனான சந்திப்பொன்றை நடத்தி அதனைத்தொடர்ந்து மக்களுக்கு விளக்கமளிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதேச மக்களின் அனுமதியின்றி இத்திட்டத்தை மேற்கொள்வதில்லை என்றும், வைத்தியசாலை கழிவுகளை எரிக்க பொருத்தமான வேறு இடத்தை பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.