கனடாவில் 155,000 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சம்பள பிரச்சினை காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், மத்திய அரசு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான, கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணி (PSAC), குடிவரவு, அகதிகள் மற்றும் கனடா குடியுரிமை உட்பட பெரும்பாலான அரச துறைகள் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில சேவைகள்
இருப்பினும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, விண்ணப்ப செயன்முறைகள், குடியுரிமை விழாக்கள் உட்பட நேரடி சந்திப்புகள் அல்லது நிகழ்வுகள், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் IRCC ஐ தொடர்புகொள்வது, தூதரக குடியுரிமை, கடவுச்சீட்டு சேவைகள் மற்றும் கனடா கடவுச்சீட்டு சேவைகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் என IRCC தெரிவித்துள்ளது.
அரசு சாரா நிறுவனங்களின் சேவைகள்
ஒன்லைனில் விண்ணப்பித்தல், IRCC க்கு விண்ணப்பங்களை அனுப்புதல், ஒன்லைன் கணக்குகளை பயன்படுத்தல் மற்றும் சில அவசர சேவைகளை அணுகல் உள்ளிட்ட பல IRCC சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை IRCC யின் பங்காளி நிறுவனங்களின் தீர்வு சேவைகள், இடைக்கால கூட்டாட்சி சுகாதார திட்டத்தின் மூலம் சுகாதார பராமரிப்பு மற்றும் கனடாவிற்கு வெளியே உள்ள விசா விண்ணப்ப மையங்களின் சேவைகள் என்பன அரசு சாரா நிறுவனங்களால் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.