கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு காது கொடுத்து இயன்றவரை அதனைத் தீர்த்து வைப்பதே ஜனநாயகத் தீர்வைத்தரும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் புதிய வரி விதிப்பு தொடர்பில் தமது எதிர்ப்பை தெரிவித்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல ஆசிரியர்களும் சில கோரிக்கைகளை முன்வைத்து வினாத்தாள் மதிப்பீடுகளில் இருந்து விலகி உள்ளனர். இதனால் உயர்தர வினாத்தாள் மதிப்பீடு மேலும் தாமதமாகி வருகின்றது.
நியாயமற்ற வரி விதிப்பு
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தாம் அரசுக்கு நியாயமான அளவில் வரி வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தாலும் நியாயமற்ற வரி விதிப்பை அவர்கள் எதிர்க்கின்றனர்.
அதேபோல தமது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர் தொழில் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன. எனவே இங்கு பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழல் உள்ளது.
இதனை அரசு விளங்கிக் கொள்ள வேண்டும். உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் உயர்தர மாணவர்களது பெறுபேறுகளை விரைவில் வெளியிடும் சூழல் உருவாகி அவர்களது எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்.
அரசின் அடக்குமுறைகள்
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காது அவர்களைப் பாதுகாத்து வைத்துக் கொண்டு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க சம்பளம் பெறுவோரை மட்டும் குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு செவிடன் போல இருந்து கொண்டு அடக்குமுறைகள் மூலம் விரிவுரையாளர்களையும், ஆசிரியர்களையும் இழுத்து வினாத்தாள் மதிப்பீடுகளை முன்னெடுக்க முனைவது ஆபத்தானது.
அது மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வினாத்தாள் மதிப்பீடு செய்பவர்கள் சந்தோசமான மனநிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களது மதிப்பீட்டு பணியை சிறப்பாகச் செய்ய முடியும்.மாறாக அழுத்தங்களுக்கு மத்தியில் பணியில் ஈடுபடுத்துவது ஆரோக்கியமான செயற்பாட்டை வெளிப்படுத்தாது. இதனை அரசு விளங்கிக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மீது அன்பு வேண்டும்
மாணவர்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் கல்விசார் சமுகத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும்.
கல்விசார் சமுகத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சித்து மேலும் பிரச்சினைகளை வளர்ப்பதை விடுத்து சுமுகத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியும், அரசும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.