சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள இலத்திரனியல் கொள்வனவு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இலத்திரனியல் கொள்வனவு முறை
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான தேவையை கருத்திற்கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களில் இலத்திரனியல் கொள்வனவு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 300 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான மதிப்பீட்டைக் கொண்ட அனைத்து முறைகள் மற்றும் வகைகளுக்கான கொள்முதல் அறிவிப்புகள், மே 1 ஆம் திகதி முதல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவான கொள்முதல் நடைமுறை
அத்துடன் 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக இலங்கை தனது இலத்திரனியல் கொள்வனவு முறையை பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய போதிலும், பெரும்பாலான அரச முகவர் நிலையங்கள் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையின் நிர்வாகத்தில் தெளிவான கொள்முதல் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே தற்போது, இந்த நடவடிக்கைககள் விரைவுப்படுத்தப்படுகின்றன.