நிட்டம்புவ – பின்னகொல்ல பிரதேசத்தில் நபரொருவர் தான் வசித்து வந்த வீடு தனியார் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டமை மற்றும் கடன் சுமை காரணமாக தொடருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த துயர சம்பவம் நேற்று (22) காலை 9.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், ரம்புக்கனையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் குறித்த நபர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். தொடருந்துடன் மோதியதில் குறித்த நபரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மோதிய தொடருந்திலேயே சடலம் கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தையும் அவரது பணப்பையில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்ட கடிதத்தில் அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ளதாவது,
“17 வருடமாக என்னோடு ஒரு பெண்ணாக எல்லா துக்கங்களையும், சந்தோஷத்தையும் தாங்கிக்கிட்டு இருந்தாய்! உன் சகிப்புத் தன்மையை கண்டு வியக்கிறேன்… இதையும் நீ தாங்கிக்கணும்.. என்னோட இந்த முட்டாள்தனமான முடிவிற்கு மன்னிக்கவும்.. இனிமேலும் தாங்க முடியாது.. எனக்கு ஒரே ஒரு விடயம் தெரியும் அதுதான் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்…! என்று உயிரிழந்தவர் தனது மனைவிக்கு எழுதியுள்ளார்.
அதே கடிதத்தில் உயிரிழந்தவர் தனது மகளுக்கு எழுதியுள்ளதாவது,
அன்பிற்குரிய பிள்ளைகளே, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அம்மாவையும் தம்பியையும் கவனித்துக்கொள். நன்றாக படி. அம்மாவிடம் பொய் சொல்லாதே. இனி அவரால் தாங்க முடியாது. என்னை வெறுக்காதே என்று சொல்ல முடியாது. ஆனால் முடிந்தால் என்னை மன்னித்துவிடு…!!!” என உயிரிழந்தவர் தனது மகளுக்கு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுதியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த வீடு தனியார் நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் செலுத்தப்படாமையினால் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது வீட்டை இழந்தமை, வேறு நிறுவனத்திற்கு பெரும் தொகை கடன் செலுத்தாமை உள்ளிட்ட பல காரணங்களால் தொடருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.