தமிழர் நலனில் இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய வெளியுறவுச் செயலரிடம் முறையிட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஸ்தம்பித நிலையில் உள்ளதெனவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளியுறவுச் செயலரிடம் முறையிட்டுள்ளனர்.
கூட்டமைப்பினரின் மேற்போந்த முறையீட்டைப் பார்க்கும் போது இவர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது உறுதியாகிறது. ஆம், கொண்ட கொள்கையில் உறுதியில்லாத இவர்களால் எதுவும் செய்ய முடியாது.
ஆக, அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சுகபோக வாழ்க்கையை இவர்கள் வாழலாமேயன்றி தமிழ் மக்களுக்கு இவர்கள் ஏதேனும் பெற்றுத் தருவார்கள் என்று யாரேனும் நம்பினால் அதை விட்ட முட்டாள்தனம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
இலங்கை அரசு ஏமாற்றுகிறது என்பது உண்மை; அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஸ்தம்பித நிலையில் உள்ளதென்பதும் உண்மை; தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை.
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை அரசிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.
நல்லாட்சியும் நம்மை ஏமாற்றுகிறது என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்த போதும் தமிழ் அரசியல் தலைமை என்று மார்தட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரியாமல் போனது ஏன்?
தமிழ் மக்களுக்கான உரிமையைத் தருவதில் இலங்கை அரசு இழுத்தடிப்புச் செய்கிறது என்பதை இந்திய வெளியுறவுச் செயலருக்கல்ல, இந்த உலகுக்கே பகிரங்கமாக சொல்லியிருக்க வேண்டும். இதைக் கூட்டமைப்புச் செய்யாதது ஏன்?
போருக்குப் பின்பு தமிழ் மக்கள் படும் துன்ப துயரங்களை வெளிப்படுத்த, சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவர தமிழ் மக்கள் பேரவை முற்பட்ட போதெல்லாம் இதோ! இனப் பிரச்சினைக்குத் தீர்வு வரப்போகிறது.
புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் வெளிவந்ததும் எங்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடும். எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தேவையற்றது.இத்தகைய பேரணிகளை நடத்துவது மக்களை உசுப்பேத்தும் செயல் என்றெல்லாம் மேடைகளில் முழங்கினீர்களே! அப்போது உங்களுக்குத் தெரியாதா? நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று.
எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை தடுத்து நிறுத்தி இலங்கை அரசுக்கு உங்கள் விசுவாசத்தைக் காட்டவும் நாங்கள் அசைந்தால் தான் தமிழினம் அசையும் என்ற போலித்தனத்தை பாதுகாப்பதற்காகவும் இனப் பிரச்சி னைக்குத் தீர்வு வரப்போகிறது என்று மேடைகளில் கூறிய உங்கள் செய்திகளை – உரைகளை இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகமும் அதன் பிராந்திய நிலையங்களும் கவனிக்காமலா விட்டிருக்கும்.
இப்போது இந்திய வெளியுறவுச் செயலரிடம் தமிழர் நலனில் இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை என்று கூறுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
மட்டக்களப்பில் நீங்கள் பேசியது என்ன? 2016 டிசம்பரில் தீர்வு என்றது எதை. இப்போது இந்தியாவிடம் நீங்கள் சொல்வது என்ன?
முதலில் தமிழ் மக்களின் நலனில் நீங்கள் அக்கறைப்படுங்கள். கொண்ட கொள்கையில் ஆற்று நீர் ஓட்டம்போல ஒரேபக்கமாக இருங்கள்.
இதைவிட்டு கடல்போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடாதீர்கள். அது உங்களை ஏமாளிகளாக்கி விடும். கவனம்.