தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன. புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
முன்பு புற்றுநோய்(கேன்சர்) வந்து விட்டால் குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புற்றுநோய் வந்து விட்டால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஆனால் தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன. புற்றுநோய் கட்டிகளை அகற்றி குணப்படுத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர்.
அந்த வகையில் பெருங்குடல் புற்று நோய் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் குடல் நோய் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:-
பெருங்குடல் புற்று நோய்
புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று பெருங்குடல் புற்று நோய். இந்த புற்று நோய் ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக பெருங்குடல் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது. மரபணு கோளாறு பெருங்குடலில் தான் நீர்சத்து உறிஞ்சப்பட்டு மனித கழிவு உருவாகுகிறது. இந்த பெருங்குடல் புற்றுநோய் மரபணு கோளாறு, குடும்பத்தில் மூதாதையர்களுக்கு யாருக்காவது(பரம்பரையாக) இருந்தால் வரும். உணவு பழக்க வழக்கங்களாலும் ஏற்படும். புகை பிடித்தல், மது அருந்துதல், இறைச்சி வகைகளை அதிகமாக உண்பதாலும் இந்த புற்றுநோய் ஏற்படும்.
தற்போது யாரும் கீரை போன்ற நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவது இல்லை. குறிப்பாக மேலை நாட்டு உணவு வகைகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இதனால் இந்த புற்று நோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோயை கண்டறிய வயிற்று பகுதியில் ஸ்கேன் மற்றும் குடல் உள்நோக்கி கருவிகள்(colonoscopy) செய்து பார்க்க வேண்டும்.
மூல நோய்
குடல் புற்று நோய் அறிகுறி இருந்தால் மலக்குடல் வழியாக ரத்தம் வரும். அதனால் நாம் மூல நோய் வழியாகத்தான் ரத்தம் வருகிறது என எண்ணக்கூடாது. 85 முதல் 90 சதவீதம் வரை மூலநோய் இருக்கலாம். 15 சதவீதம் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதேபோல வலது பக்க பெருங்குடல், மேல் பகுதியில் ரத்தக்கசிவு இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம்.
உடலில் ஹீமோகுளோபின்(ரத்த அளவு) குறைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு உடல்சோர்வு, பசியின்மை, மலச்சிக்கல், ரத்தசோகை போன்றவை காரணமாக இருக்கும். இடது பக்க பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டு பின்னர் அடைப்பு ஏற்படும்.
மேலும் மலச்சிக்கலுடன், ஒரிரு நாட்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி என அடிக்கடி ஏற்பட்டால் கூட பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக தென்படும். தொடக்க நிலை இதை கவனிக்காமல் விட்டால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதற்கு தகுந்த அறுவை சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தலாம். இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இதற்கு அறுவை சிகிச்சை ஹீமோதெரபி, மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் இதில் எந்த நோயாளிக்கு எந்த வகையான சிகிச்சை முறை தேவை என்பதை புற்றுநோய் மருத்துவக்குழு தான் முடிவு செய்யும்.
அறுவை சிகிச்சைகளும் 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஒன்று வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்றொரு முறை நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை(laparoscopy) மூலம் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படும்.
இந்த சிகிச்சை முறையை சிறந்த அறுவை சிகிச்சை டாக்டர்களை கொண்டு செய்ய வேண்டும். வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்வதை காட்டிலும், லேப்ராஸ்கோப்பி மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை முறை என்பது மிகவும் துல்லியமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும்.
கதிர்வீச்சு சிகிச்சை வயிற்றை திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சை செய்தால் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தால் மறு நாளே நோயாளி எழுந்து நடக்கலாம். 4 நாட்களில் வீடு திரும்பலாம்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பெருங்குடல், மலக்குடல் புற்று நோயை முதல் மற்றும் 2-வது நிலைகளிலேயே கண்டறிந்தால் துல்லியமாக குணப்படுத்தி விடலாம். ஆரம்ப நிலையில் அலட்சியமாக இருந்து விட்டு நோய் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்துவது சற்று கடினம்.
தற்போது இந்த பெருங்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரோபோடிக் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் வந்து விட்டது. எனவே நாம் விழிப்புடன் இருந்தால், பெருங்குடல் புற்று நோயை குணப்படுத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.