சூடானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது.
நெருக்கடி நிறைந்த நாட்டில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணியை பல நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.
இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை
இந்நிலையில், இலங்கையர்களை பாதுகாப்பான இடத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்வதற்கு இந்திய உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த செயல்முறையை ஒருங்கிணைத்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேவை ஏற்பட்டால், சவூதி அரேபியாவிடமும் இலங்கை உதவிகளை பெற்றுகொள்ள முயற்சிப்பதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
சூடானில் தொடரும் பதற்றம்
சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இந்நிலையில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.
சூடான் தனது வான் வெளியை மூடி உள்ளதால் உலக நாடுகள் தங்கள் நாட்டினரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்டுகின்றது.