களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் களுத்துறை, சேறுபிட்ட வெந்தேசிவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கந்தமுல்லைச் சேர்ந்த உதேனி நிமேஷா கருணாதிலக்க என்ற 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞான பிரிவில் பயிலும் இறுதியாண்டு மாணவியென விசாரணையில் தெரியவந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தான் திருமணம் செய்யவிருந்த இளைஞனுடன் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது களுத்துறையிலிருந்து சென்ற லொறியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளதாகவும், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.