- பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பின்னர் கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.
கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.
இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார். அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள உன்னி முகுந்தன், “நன்றி சார், 14 வயதில் உங்களைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு இப்போது உங்களைச் சந்தித்ததில் இருந்து மீளவில்லை. உங்களுடன் பேசிய அந்த 45 நிமிடங்கள் என் வாழ்வின் சிறந்த நிமிடங்கள். நீங்கள் சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. ஒவ்வொரு அறிவுரையும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.