நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது பலரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குமுதினி படகில் பயணித்து கொண்டிருந்த ஆறு மாதக் குழந்தை உட்பட 33 பேர் நடுக்கடலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட அந்த கறைபடிந்த நிணைவுகளுடள் வாழ்ந்த நெடுந்தீவு மக்கள் மத்தியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நெடுந்தீவு மாவிலித்துறையில் உள்ள வீடொன்றில் ஐவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதுடன் மூதாட்டி ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மீட்க்கப்பட்ட சம்பவம் முழு உலகையும் உறைய வைத்துள்ளது.
இலங்கையின் வடமாகாணத்தில் ஆறுக்கும் மேற்பட்ட வரலாற்று அடையாளங்களை கொண்டமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவாக நெடுந்தீவு அமைந்துள்ளது.
இது அதிகமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமாகும். சுற்றுலாப் பயணிகள், கிராமவாசிகளுக்கு படகு மூலம் பயணம் செய்வது எளிதானது.
கவர்ச்சிகரமான பயணம் யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு பாலமாக அமைந்துள்ள புங்குடுத்தீவில் உள்ள குறிகாட்டுவானில் இருந்து தொடங்குகிறது.
தீவு முழுவதும் பவளம், சுண்ணாம்புக் கல்லை அடிப்படையாகக் கொண்டது. தீவு வளர்ச்சியடையாதது, ஆனால் அதன் மக்கள் தொகை சுமார் 4,500 பேர் வரையுள்ளனர்.
இலங்கையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்கள் பல காணப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த நெடுந்தீவும் அந்தவகையில் பிரசித்தி பெற்றதாகும்.
அதாவது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.
ஒல்லாந்தர்கள் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத் தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகிறது.
நெடுந்தீவு, தலைத்தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத்தீவு, தயிர்த்தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
யாழ். குடா நாட்டில் இருந்து நெடுந் தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது.
தொல்லியல் வரலாற்று பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம் கால்நடை கடல் வளங்களுடன் உள்ளது.
1813ம் ஆண்டு நெடுந்தீவுக் கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த்தி டி போலோ எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத் தீவின் அழகையும் வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறார்.
இவ்வாறு வரலாற்று தொண்மையும் தனித்துவமும் கொண்ட நெடுந்தீவுக்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்லுகின்ற ஒரு இடமாக இந்த பிரதேசம் காணப்படுகின்றது.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகையின் காரணமாக இங்கிருக்கின்ற மக்கள் பல்வேறுபட்ட வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறிப்பாக சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான வாகனங்களை வைத்திருத்தல், சுற்றுலா பயணிகள் தங்குவதற்குரிய தங்குமிட வசதிகளை வழங்குதல், சுற்றுலா பயணிகளுக்கு விரும்பிய உணவுகளை வழங்கக்கூடியவாறு என பல்வேறுபட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இக் கொலை சம்பவத்தை அடுத்து நெடுந்தீவுக்கான சுற்றுலா பயணிகளின் வருகை முற்றாக முடங்கியுள்ளது.
இதனால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் மக்கள் மத்தியில் ஒரு பயப்பீதியும் தோன்றியுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு கடற்கரையின் பாதுகாப்பு என பல்வேறு பாதுகாப்புகள் இருக்கின்ற போதும் எதிர்பாரா விதமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்று இருப்பது அனைவர் மத்தியிலும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.