மனைவியின் ஆடை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிஹிந்தலை – சிப்புக்குளம், அம்பகஹவெல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி குழந்தைகளை மேலதிக வகுப்புக்கு அழைத்துச் செல்வதற்காக மனைவி வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்த போது, கணவன் மனைவியை கலர் ஆடையை அணியுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்னர் குழந்தைகளை மேலதிக வகுப்பில் விட்டுச்சென்ற கணவர் மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்தி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன் காரணமாக கணவன் தன்னை அடித்து துன்புறுத்தலாம் என பயந்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த குடும்பத் தகராறு தொடர்பான முறைப்பாட்டை விசாரிப்பதற்காக நேற்று (24ஆம் திகதி) முறைப்பாட்டாளரின் மனைவி பொலிஸாருக்கு வந்திருந்த போதும், சிவில் பாதுகாப்பு படை சிப்பாயான கணவன் வராத காரணத்தினால், அயலவர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கணவரின் சடலம் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மிஹிந்தலை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் திரு.குணசேகரவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.