தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முடிவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டதாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு அளித்தார். இதையடுத்து, வாக்கெடுப்பு நடந்த அன்று காலை 11 மணியில் இருந்து மாலை 3.27 மணிவரை சட்டசபைக்குள் நடந்தது என்ன? என்பது தொடர்பாக உண்மையான முறையில் விரிவான விளக்கம் அளிக்குமாறு சட்டசபை செயலாளர் ஜமாலுதீனுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.
கடந்த 20-ம் தேதி இதுதொடர்பான அறிக்கையை கவர்னருக்கு ஜமாலுதீன் அனுப்பி வைத்திருந்தார். அதை படித்துப் பார்த்து பரிசீலித்த கவர்னர், இன்று அந்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக மரபுகள் கடைபிடிக்கவில்லை என்று பல்வேறு விளக்கங்களுடன் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந்தார். இதுதொடர்பாக, டெல்லிக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்து புகார் அளிக்கவும் தீர்மானித்தார். ஜனாதிபதியும் அவரை நாளை (23-ம் தேதி) சந்திக்க நேரம் ஒதுக்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.