முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இந்த முடிவு தொடர்பான கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கையானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக – பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடரும் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.