- பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள்.
- பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.
தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பானமாக கருதப்படுகிறது. இதில் சுவை என்று எதுவும் இருப்பதில்லை. ஆனால் கோடைகாலங்களில் தண்ணீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது ஏன் தெரியுமா?
பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள். ஆனால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதில் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இந்த கோடைகாலத்தில் குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க போதுமானதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் தாய்ப்பால் போதும் என்பது தான் பதிலாக இருக்கிறது.
தண்ணீர் ஏன் கொடுக்கக்கூடாது?
பிறந்து சில மாதங்கள் வரை, பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் தண்ணீரை செரிமானம் செய்ய தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். அவர்களின் வளர்ச்சியடையாத சிறுநீரகங்கள் ஊட்டச்சத்து இழப்பினால் எளிதில் பாதிக்கப்படும். பிறந்த குழந்தையின் வயிற்றில் உண்மையில் 1 முதல் 2 டீஸ்பூன்கள் அல்லது 5 முதல் 10 மி.லிக்கு மட்டுமே இடம் இருக்கும். குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது தேவையில்லாத பொருள்களால் அவர்களின் வயிற்றை நிரப்புவதற்கு சமம். இதனால் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் கலோரிகளுக்கு இடமளிக்காது. குறிப்பாக தண்ணீரில் எந்த சத்துக்களும் இல்லை. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கும்.
குழந்தையின் 6 மாதத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அரை கப் தண்ணீர் தேவைப்படுகிறது. சில குழந்தைகள் அதிகமாக விரும்பினாலும் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக எதுவும் தேவைப்படாது. உங்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதற்கு முன், உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு அவர் சொல்லும் அளவுகளில் தண்ணீர் கொடுங்கள்.