தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கோரி, ரவிராஜின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அனுமதியளித்துள்ளது.
ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர்களான ஐவரும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டது எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விஷேட ஜூரி சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த வழக்கின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறும், அந்த வழக்கை மீள விசாரணை செய்யுமாறும் உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்தவகையில் குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 5 பேர் மற்றும் சட்டமா அதிபரை எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.