இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது. இதனையொட்டி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, தனது அணித்தலைவர் பதவியை விமர்சிக்க இது சரியான தருணமில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஒவ்வொரு தொடர் முடிந்த பின்னும் என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்வதில்லை. போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரே குறிக்கோளாக இருக்கும். அணி வீரர்கள் நன்றாக விளையாடினால் கேப்டன் பதவி சிறந்ததாக இருக்கும். அதே நேரம் மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், கேப்டனாக அங்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
கேப்டன் பதவியில் என்னை சீக்கிரமாக அமரவைத்து, நான் திறமையாக அதனைக் கையாளுகிறேனா? இல்லையா? என்பதை மற்றவர்கள் கணிப்பதாக தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் திறமையாக செயல்படுகிறார். அதனால் தான் லெக்-ஸ்பின்னராக ஆரம்பித்து இன்று உலகின் நம்பர் 1 டெஸ்ட் வீரராக அவர் மாறியிருக்கிறார்.
என்னைப்பற்றி கட்டுரை எழுதுவது, பேசுவது மக்களின் வேலை. என்னால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் அதுவே எனக்கு முக்கியமானது” என்றார்.