- ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையுலக நட்சத்திரங்கள் மீது அன்பைப் பொழியும் வகையில் நடிகைகளுக்கு கோவில் கட்டி வருகின்றனர்.
- குஷ்பு, நிதி அகர்வால் மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கு ஏற்கனவே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையுலக நட்சத்திரங்கள் மீது அன்பைப் பொழியும் வகையில் நடிகைகளுக்கு கோவில் கட்டி வருகின்றனர். குஷ்பு, நிதி அகர்வால் மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கு ஏற்கனவே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தீவிர ரசிகர்களால் கோவில் கட்டி வழிபடும் இந்த வழக்கம் ஆந்திராவிலும் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஆலப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் தெனாலி சந்தீப். கார் டிரைவரான இவர் சமந்தாவின் தீவிர ரசிகர். அவருக்காக தனது வீட்டில் ஒரு பகுதியில் கோவில் கட்டி உள்ளார். கோவிலின் மையப் பகுதியில் சமந்தாவின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.சமந்தாவின் பிறந்த நாளான இன்று கோவிலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த கோவிலை சமந்தாவின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர். சமந்தா கோவிலில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவில் கட்டியுள்ள தெனாலி சந்தீப் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தாவிற்காக திருப்பதி, சென்னை, வேளாங்கண்ணி, கடப்பா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சர்வ மத பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமானது முதல் நான் அவரது ரசிகனாக இருந்து வருகிறேன். அவரது உணர்வு மற்றும் கருணை, அறக்கட்டளை மூலம் பல குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்துள்ளார். இது என்னை ஊக்கப்படுத்தியது.
2 பிள்ளைகளின் தந்தையான நான், சமந்தாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது முதலில் யாரும் நம்பவில்லை. நான் இப்படி பணத்தை வீணடிப்பதாகவும், எனக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம் என்று எனது ஊர்மக்கள் சிலர் நினைத்தார்கள். அவர்களின் கருத்துக்கள் என்னை பாதிக்கவில்லை.
சமந்தாவுக்கு கோவில் கட்ட எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது. அவர்கள் என்னை ஒருமுறை கூட கேலி செய்யவில்லை. கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என கூறவில்லை. கோவில் திறப்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்தேன். இது தற்போது சமந்தா கோவிலை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.