- வெற்றிலையின் மீது சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வையுங்கள்.
- இந்த நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.
துளசியைக் கொண்டு பூஜை செய்வதும் சிறப்பு. துளசியையே பூஜை செய்வதும் மிகுந்த விசேஷம். துளசியை பூஜிக்கும் முறை மிக மிக எளிமையானது.
முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.
துளசி மாடம் வீட்டில் உள்ளதா? இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்துக் கொள்ளலாம். அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்குங்கள். அத்துடன், ‘ஸ்வாகதம்’ என்று மூன்று முறை சொல்லுங்கள். .
அடுத்து, வெற்றிலையின் மீது சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செந்நிற மலரால் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.
அடுத்து, தேங்காய், பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள்.
‘ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:’ – என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து… ‘ஓம் கஜானனாய நம:’ என்று துவங்கி விநாயகரின் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து தீபாராதனை காட்டுங்கள்.
அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்வது சிறப்பு. பின்னர், கணவன்- மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்துகொள்ளுங்கள். அடுத்து இந்த நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:
ஓம் விஸ்வ பூஜிதாயை நம:
ஓம் விஷ்ணுப்ரியாயை நம:
ஓம் தேவ மூலிகாயை நம:
ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:
ஓம் கிருஷ்ண லீலா விநோதின்யை நம:
ஓம் ஸௌபாக்ய நிலயாயை நம:
ஓம் விஷ்ணு கேசின்யை நம:
ஓம் புஷ்பசாராயை நம:
ஓம் நந்தவன நாயகாயை நம:
ஓம் விஸ்வ பாவணாயை நம:
ஓம் யாக பூஜிதாயை நம:
ஓம் தான ப்ரதாயின்யை நம:
ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:
ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:
ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:
அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து, மூன்றுமுறை தன்னையே சுற்றிக்கொண்டு இந்த துதியை மூன்று முறை சொல்லுங்கள்.
ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீ
விஸ்வ பூஜிதா விஸ்வபாவனீ
புஷ்பஸாரா நந்தனீச
துளசீ க்ருஷ்ண ஜீவனீ
ஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம்
நாமார்த்த ஸம்யுதம் ய:படேத் தாம்ஸ
ஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்!
இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,
ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே
க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம்
என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு தீபாராதனை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். .
ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹி
தந்நோ துளசீ ப்ரசோதயாத்
யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதா
யதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம்
கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி
என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம். மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுங்கள்.
விரதம் இருந்து இந்த பூஜை செய்து வந்தால் உங்கள் குடும்பம் சிறக்கும். தழைக்கும். தாலிபாக்கியம் நிலைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தீராத நோயெல்லாம் தீரும். தீய சக்திகள் இல்லத்திலும் உடலிலும் உள்ளத்திலும் அண்டாது.