மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் தற்போது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இரண்டு ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய மேல் மாகாண ஆளுநராக உள்ள எயார்ஃபோர்ஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றும் அட்மிரல் வசந்த கர்ணகொட ஆகியோர் இந்த அவல நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆளுநர்கள் மீதும் கடும் விமர்சனங்கள்
இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் அந்தந்த மாகாணங்களில் இராணுவம் போன்ற ஆட்சியை நடத்துவதாகக் கூறி, அண்மையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத கட்டிட அனுமதிகள் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கைகள் போன்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் குற்றச்சாட்டுகளுக்குக் காரணம் செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.
சனத் நிஷாந்த, காமினி லொக்குகே, டி.பி. ஹேரத், ஜயந்த கெடகொட மற்றும் மதுர விதானகே தலைமையிலான பலர், குறித்த இரண்டு ஆளுநர்கள் மீதும் தமது விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.