- திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
- மார்க்கண்டேயர் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் வீதி உலா நடைபெற்றது.
இந்த நிலையில் காலசம்ஹார திருவிழாவானது கோவில் வளாகத்தில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடைந்ததை தொடர்ந்து மார்க்கண்டேயரின் உயிரை பறிக்க எமன் வந்தார். மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு 108- வதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது மார்க்கண்டேயர் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார். கோவிலில் மார்க்கண்டேயரை நோக்கி வந்த எமதர்மன் பாசக்கயிறை வீசும் பொழுது, மார்க்கண்டேயர் மீது மட்டும் விழாமல், சிவலிங்கத்தின் மேல் பாசக்கயிறு விழுந்தது. உடனே கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். இதன் மூலம் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார். அப்பொழுது மார்க்கண்டேயருக்கு என்றும் 16 வயதாக இருக்க அருள்பாலித்தார்.
சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து காலனை வதம் செய்யும் நிகழ்ச்சியான காலசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமானது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் குருக்கள் செய்திருந்தனர்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய இடம் பிடிக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அபிராமி அம்மனின் சிறப்பு இந்தியா முழுவதும் பரவி உள்ளது.
தன்னை தினமும் வேண்டி வழிபட்ட சுப்பிரமணிய பட்டரின் உயிரை காத்து அவருக்கு அபிராமி பட்டர் என்ற பெயரை வழங்கிய அபிராமி அம்மனை வழிபட்டால் நீ்ங்கா துன்பங்கள் விரைவில் நீங்கி நல்லருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.