அமெரிக்க தாயார் ஒருவர் புற்றுநோயால் அவதிப்படும் தமது 10 வயது மகனின் மனதைப் பிசையும் புகைப்படத்தை வெளியிட்டு, இதுதான் எனது உலகம் என குறிப்பிட்டு நெக்குருக வைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் குடியிருக்கும் தாயார் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் புற்றுநோயால் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கும் தமது 10 வயது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் அந்த புகைப்படத்துடன் இரத்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
’எப்போது நான் அவனை கருவுற்றதாக அறிந்தேனோ அந்த கணம் தொடங்கி எதிர்காலம் வரை எனது வாழ்க்கையின் அர்த்தம் அவந்தான். எனது புன்னகைக்கும், பாசத்திற்கும், இதயத்துடிப்பிற்கும் அவனே காரணம். அவந்தான் எனது கண்ணீருக்கும், வலிக்கும் துயரத்திற்கும் காரணம், அவனே எனது வாழ்க்கை.
எனது மகனின் புகைப்படத்தை பார்த்து, ஏன் என ஒரு கணம் நீங்கள் என் மீது கோபப்படலாம். ஆனால் வாழ்க்கையின் துயரங்களையும் பதிவிட வேண்டும் அல்லவா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை ஒன்றும் அத்துணை அருமையானதல்ல. மட்டுமின்றி புற்றுநோய் ஒரு மனிதனை கடுமையாக சீரழிக்கும்.
வெறும் 10 வயதே ஆகும் சிறுவன் Drake இது இரண்டாவது முறையாக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளான். அவனுக்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சையின் பக்கவிளைவுகளால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான்.
முதன் முதலில் அவனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை, இரத்தம் மாற்றுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த 6 மாதத்தில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுவனுக்கு testicular புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். சிறுவனின் தாயார் ஜெஸ்ஸிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் பலகீன நிலையில் இருக்கும் Drake சிறுநீர் கழிக்க அவஸ்த்தைப்படுகிறான்.
தினசரி 44 மாத்திரைகள் உட்கொள்ள வேண்டி இருப்பதால், அதன் தாக்கத்தால் எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி தனியாக படுத்துறங்கவோ தனித்திருக்கவோ மிகவும் அஞ்சும் நிலையில் தற்போது சிறுவன் Drake தள்ளப்பட்டுள்ளான்.
சிறுவனின் சிகிச்சை செலவினங்களுக்காக Drake குடும்பத்தினர் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றனர். தற்போது அந்த தொகை 30,000 டொலர் என பெருகியுள்ளது எனவும், மேலும் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.