- மே 11 ஆம் தேதி பிக்சல் 7a இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- பிக்சல் 7a அம்சங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன.
கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து மே 11 ஆம் தேதி பிக்சல் 7a இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் பிக்சல் 7a மாடலுக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் யூனிட்கள் இபே (EBay) வலைதளத்தில் தற்போது விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன்பே பிக்சல் 7a யூனிட்கள் விற்பனைக்கு வந்துள்ளது பற்றி ஸ்மார்ட்போன் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது கூகுள் தவிர வேறு நபர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பிக்சல் 7a யூனிட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிடைக்கும் யூனிட்களை கூகுள் நிறுவனம் மென்பொருள் மூலம் செயலிழக்கச் செய்துவிடும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இன்னும், சில நாட்களில் பிக்சல் 7a மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 499 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகமாகாத சாதனங்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைப்பது முதல்முறை இல்லை. முன்னதாக பல சமயங்களில் நிறுவனங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பே புதிய சாதனங்கள் இபே போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இபே தளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதன் மூலம் அதன் அம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி பிக்சல் 7a மாடலில் டூயல் சிம் வசதி, 5ஜி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் டென்சார் G2 சிப்செட் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.